லண்டன் தமிழவையின் வெள்ளிவிழா எதிர்வரும் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி மிகக் கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. இந்த வெள்ளிவிழா மிகச்சிறப்பாக நடைபெற முதலில் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளை சொல்லி மகிழ்கின்றேன்.
தமிழவையின் நிறுவனர், என் அன்புக்கும், பாசத்திற்கும், மதிப்புக்கும், மரியாதைக்குமுரிய புலவர் ந. சிவநாதன் அண்ணன் அவர்களை நான் என் நெஞ்சில் வைத்துப் போற்றுபவன். முதுதமிழ் புலவர் நல்லதம்பி ஐயா அவர்கள் பெற்றுத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்த பொக்கிஷம், பேராளுமை புலவர் அண்ணா அவர்களாகும். அவரது பேச்சிலும் மூச்சிலும் தமிழும் தமிழ் தேசிய உணர்வும் தான் எப்பொழுதும் கலந்திருக்கும். அவர் ஐக்கிய ராஜ்யத்திற்கு புலம்பெயர்ந்த பின் தனது சொந்த வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இவற்றிற்கு அப்பால் சென்று தனது தமிழுக்கும் தமிழ் மக்களுக்குமாக வாழ நினைத்தார். அதன் பிரதிபலிப்புத்தான் அவர் நிறுவிய தமிழவையாகும்.
இந்த தமிழவை மூலம் தமிழ் மொழி, கலை, கவிதை, நாட்டிய நாடகங்கள், இலக்கியப் பண்பாட்டு விழுமியங்களை புதிய வீச்சுடன், புதிய பரிமாணத்துடன் வெளிக்கொண்டு வந்து அதை எதிர்கால சந்ததிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பி இயந்திரமாக இயங்கினார்.
“அன்பே தமிழ் அதிலே அமிழ்” என்ற தாரக மந்திரத்தை சொல்லிக் கொண்டே அன்பாக எல்லோரையும் அணைத்துக் கொண்டு 25 வருடங்கள்,
“இலண்டன் தமிழவை” என்ற தமிழ்க் கோட்டையில் கொடியேற்றி அதை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்திடச் செய்தவர். அன்பு அண்ணன் புலவர் சிவநாதன் அவர்களை தமிழவையின் ஸ்தாபகர் என்ற முறையில் நான் வாழ்த்தி வணங்குகின்றேன். அவர் அனைத்து நலன்களுடனும், நல்ல ஆரோக்கியத்துடனுமிருந்து தமிழவையை முன்னெடுத்துச் செல்லவேண்டுமென்று எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றேன்.
வெள்ளிவிழா காணும் தமிழவை தொடர்ந்து முத்தமிழுக்கும், இலக்கியத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களுக்கும் தனது ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையாற்றி இன்னும் பொன்விழா, பவளவிழா, நூற்றாண்டுவிழாவென பல விழாக்களைக் காணவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
“அன்பே தமிழ் அதிலே அமிழ்”
-கோவிலூர் செல்வராஜன்-

