ஒரு காலத்தில் தமிழ் வழங்கும் எல்லை “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை” என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்தக் காலத்திலேயே அந்த எல்லை கடந்து ஈழத்தில் தமிழ் வழக்கு மொழியாகச் செந்தமிழிருந்தது. எனினும் தமிழ் நாடு,ஈழம் ஆகியன கடந்து தமிழ் வழங்கிய நாடுகள் என்று எவையும் இருந்ததில்லை. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பூமிப்பந்தின் எல்லாத்திசைகளுக்கும் தமிழ்ச் சமுதாயம் புலம்பெயரத் தொடங்கியது. அவ்வாறு புலம்பெயர்ந்த நாடுகளுள் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றில் குடியேறிய தமிழர்கள் தொடர்ந்தும் தமிழறிந்தவர்களாய்- தமிழில் பேசுபவர்களாய் வாழ்ந்து வருகிறார்கள். ஏனைய நாடுகளில் குடியேறியவர்களில் பெரும்பாலும் தமிழறியாத தமிழர்களாய் ஆகிவிட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் பிற்கூறிலே ஈழத்திலே மூண்டெழுந்த உள்நாட்டுப்போர் ஈழத்தமிழர் பலரை உலகம் எங்கணும் சிதறியோட வைத்தது. அவர்கள் முன்பு பிரித்தானியர் காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களைப்போல் ‘பஞ்சம் பிழைப்பதற்காக’ தாய் நாட்டை விட்டு ஓடவில்லை. உயிரச்சம் காரணமாகவே ஓட நேர்ந்தது. அந்த உயிரச்சம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் உண்டானது. அந்த யுத்தம் சிங்கள – தமிழ் இன முரண்பாட்டால் ஏற்பட்டது. அந்த முரண்பாடு தமிழர்களும் தமிழ் மொழியும் சிங்கள அரசுகளால் பாரபட்சமாக ஒதுக்கப்பட்ட காரணத்தால் உண்டானது.
சுருக்கமாக கூறினால் ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வுக்குக் காரணம் அவர்கள் தமிழர்களாய் – தமிழ் பேசுபவர்களாய் இருந்தமையே.
இலங்கையில் தமிழர்களாய் இருந்த காரணத்தால் தமிழுணர்வோடு – தேசிய உணர்வோடு புலம்பெயர நேர்ந்தவர்கள் தங்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்களாய் தமிழறிந்தவர்களாய் இருக்கும் வரையிலேயே அவர்களுடைய தமிழ்ப் பற்றுக்கும் தேசிய உணர்ச்சிக்கும் அர்த்தம் இருக்கும். அவர்கள் என்றால் அவர்களது சந்ததியும்தான். அல்லாத பட்சத்தில் அவர்களை வெறும் பொருளாதாரத்துக்காக உள்நாட்டு யுத்தத்தைச் சாட்டாகக் கொண்டு பறந்தவர்கள் என்றே அடையாளப்படுத்த நேரிடும்.
அந்த உண்மையை உணர்ந்வர்களாய் நம் புலம்பெயர் உறவுகள் தாம் சென்று குடியேறிய நாடுகளிலெல்லாம் தமிழை வளர்ப்பதற்கும் தம் பண்பாட்டைப் பேணுவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிகரமான விடயம். அவ்வாறான தமிழ் உணர்வாளர்களில் தலையாயவராக புலவர் நல்லதம்பி சிவநாதனை நம்மால் இனங்காண முடியும்.
அவர் இலங்கையின் தவப்புதல்வர்களுள் ஒருவரான முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்களின் புதல்வர். தந்தையைப் போலவே தேசிய உணர்விலும் தமிழ் மொழிப் பற்றிலும் தளராத நிலைப்பாடு கொண்டவர். தேர்ந்து கொண்டு கற்ற துறை பொறியியலாக இருந்த போதிலும் அவர் நேர்ந்து கொண்டது தமிழையே. தமிழ்ப் பற்றில் மாத்திரமன்றி தமிழ் அறிவிலும் தமிழிற் கவிபாடும் வல்லமையிலும் தந்தை வழியே தன் வழி என்று கொண்டவர்.
முதுதமிழ்ப் புலவர் யாழ்ப்பாணத்து வட்டுக் கோட்டையிற் பிறந்து வளர்ந்தவராயினும் அவர் தொழில் பார்க்க நேர்ந்தது தென்னிலங்கையிலே – கொழும்பிலேயே. சிங்களச் சூழலிலே வாழ நேர்ந்த போதிலும் அவர் தமிழ்ப் பண்பாட்டுப் பேணுகையின் நிமித்தம் ‘இசைக்கலை மன்றம்” முதலான அமைப்புகளை அங்கே நிறுவினார். தனயன் பிரித்தானியாவில் வாழ நேர்ந்த நிலையில் ‘தமிழவை”யை நிறுவினார். தமிழவை பிரித்தானிய அளவில் நின்றவிடாது உலகம் எங்கணும் வாழும் தமிழர்களையெல்லாம் இணைப்பதற்கு நவீன தொழிநுட்ப வழியாக வகை செய்கின்றமை பாராட்டத்தக்கது. பல்லாற்றானும் தமிழ் வளர்ச்சி கருதி உழைக்கும் அந்த அவை புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் அடுத்த அடுத்த சந்ததிகளும் தமிழறிந்தனவாக – தமிழர்களாக வாழ வகை செய்யும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வாழ்த்துவதில் பெரு மகிழ்வு எய்துகிறேன்
க.இரகுபரன்,
மொழித்துறை,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,
ஒலுவில்,
இலங்கை

