அன்பே தமிழ் அதிலே அமிழ் என்ற இலட்சியத்தோடு ஆன்றோர் ஆசியும் சான்றோர் சால்பும்; தோன்றாத் துணையாய் கொண்ட அவையாக 1999இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழவை இன்று தனது 25 வயதில் வெள்ளிவிழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றது. சிறுகக் கட்டிப் பெருக வாழ் என்பது போல் சிறுகச் சிறுக ஆரம்பித்து கொரோனாக் காலத்தில் பெருகப் பெருக இணையத்தினூடே சாதனைகள் படைத்து இன்று விசாலமான பெருவிருட்சமாக தன் பணிகளை விரிவாக்கி உள்ளது. இதன் ஆரம்பகர்த்தாவும் காப்பாளரும் எல்லாமாக இயங்குபவருமான புலவர் அண்ணா பற்றிச் சில வார்த்தைகள் இயம்ப வேண்டும்.
வோல்தம் பொறஸ்ட் தமிழ்ச்சங்கத்தில் நானும் தம்பி ஜெயகுமாரும் அலை ஓசை என்னும் மாத சஞ்சிகையை நடாத்தும்போது அதில் தொடர்ச்சியாக கட்டுரைகளை வழங்கி வந்தவர் புலவர் அண்ணா.
இதன்மூலம் எமது நட்பு ஆரம்பமாகியது. பாசம் பொங்குகையில் இராசகிளி, பாலு என்ற அன்பு வார்த்தைகளும், சினம் கொள்கையில் டேய், குரங்கா என்ற வசை வார்த்தைகளும் தாராளமாக வெளிவரும். என் வாழ்க்கையில் என் நண்பர்கள் தவிர்ந்து என்னை டேய் என்று அழைப்பவர்கள் நவா அண்ணாவும் புலவர் அண்ணாவும் ஆகும். அந்த அளவுக்கு என்மீது அவர்களுக்கு உரிமை உண்டென்பது அர்த்தம். அண்ணாவுடம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் அலாதியானது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாகவும் கவியரங்கங்கள் நிகழ்ச்சிகள் என்று பயணப்பட்டுள்ளோம். லண்டனில் பல கவியரங்கங்கள் நடாத்தியுள்ளோம். அவர் இலகுவாகத் தலைப்பு எடுத்துவிடுவார். நாங்கள்தான் இரவிரவாக அவற்றுக்கு கருத்தேடுவோம். நம்நாடு என்ற பத்திரிகையை அவர் நடாத்தும்போது நிறைந்து விடயங்கள் பரிமாறியிருப்போம். பேச்சில் பாசமும் இருக்கும். தன்னையறியாத கிண்டலும் இருக்கும். வடிவேலு எல்லாம் அண்ணாவிடம் பாடம் கற்கவேண்டும். நாளாந்த வாழ்வில் நடைபெறும் நன்மை தீமையெல்லாம் கவிதை நாடக உருவில் அண்ணாவின் படைப்பாக வெளிவரும்.
சாடிக்கேற்ற மூடி அவர் பத்தினியார் ரஜனி அக்கா. அவர் மறந்தவைகளை நினைவுபடுத்துவதும், அவரைக் காயமுற்றுப் பேசுபவர்களை மன்னிக்க வேண்டுவதும், புலவர் அண்ணா காயமுறப்பேசினால் கோபமுற்று பிழையென்று ஆலோசனைகளை வாரி வழங்குவதும் பின்னர் கோபம் ஆறியதும் பாசம் பொங்குவதும் அவர் தனிப்பண்பு. அண்ணா படைத்த கவிதைகள், நாடகங்கள் நாட்டிய நாடகங்கள், வானொலித்தயாரிப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அளவற்றன. அவற்றை அவரே தொகுக்க வேண்டிய கவலையான நிலைமை. தனது ஆற்றலை தமிழகத்தின் பல பகுதிகளிலும் நிலைநாட்டியுள்ளார். இலண்டனில் இருந்து இப்படியோர் ஆழ்ந்த புலமையும் கவித்துவமும் உள்ள மனிதரா என வியக்க வைத்துள்ளார்.
தாயக விடுதலையே தாரக மந்திரமாக தன் வாழ்நாளை ஆக்கிக்கொண்டிருக்கும் அவரால் தாயகத்தில் சுதந்திரமாக தன் படைப்புக்களை, ஆற்றலை வெளிக்கொணர முடியாது போய்விட்டது. இது அவருக்கு ஆழ்ந்த கவலை. தான் பிறந்த தவழ்ந்த புழுதி அழைந்த ஊரான வட்டுக்கோட்டையில் தன் ஆழுமையைப் பகிரமுடியவில்லை என்பது தீராக்கவலை.
தேசம் தேசியம் தெய்வீகம் என்ற இலக்கோடு அவர் பயணம் தொடர்கிறது.
கொரோனா காலத்தில் வாரம் இருதடவைகள் தாயகத்திலும் தமிழகத்திலும் உள்ள பல தமிழ் அறிஞர்களை புலனத்தினூடு அழைத்து எங்கள் எல்லோருக்கும் நல்ல தமிழ் சிந்தனைகளை, எமது பூர்வீக வரலாற்றை உணர வைத்தார். இங்கு பிறந்து வளர்ந்து வாழும் குழங்தைகட்கு சிறப்பாக ஐரோப்பாவில் வாழும் குழந்தைகளும் தங்கள் தமிழாற்றலை வெளிக்கொணர தமிழவை பாலமாக நிற்க வைத்தார். இங்குள்ள தமிழ்ச்சங்கங்களை அணுகி அந்த மாணவர்களுக்கு நாடகங்கள் பயிறிறுவித்தார். நடன ஆசிரியர்களுக்கு சிறந்த நாட்டிய நாடகங்களை யாத்து தனது எழுத்தாளுமையையும் நடன ஆசிரியர்களின் இயல்பான ஆற்றலையும் வெளிக்கொணர வைத்தார்.
கொரோனா எல்லோர்க்கும் அழிவைத்தந்தாலும் அக்காலம் வீடுகளில் அடைந்திருந்து உளவிரக்தியாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு உள மருந்தாக நிறைந்த நிகழ்ச்சிகளை தயாரித்தும் சிறந்த ஆற்றல் உள்ளவர்களை அறிமுகப்படுத்தியும் துன்ப சூழ்நிலையிலும் இன்பமாக இருக்க ஆறுதல் தந்தார்.
அவரது நாடகங்களில் நடிக்க வயது பேதமின்றி இங்குள்ளோர் ஆர்வமுடன் இணைந்து கொள்வது நல்ல கருத்தாளுமைக்கும் சிறந்த நகைச்சுவைக்கும், நாளாந்த வேலைத்துன்பங்களில் இருந்து சற்று ஆசுவாசப்படுத்தவுமே.
அவர் படைத்துள்ள நூல்கள் ஏராளம், ஏராளம். வருங்கால சந்ததிக்கு நிறையவே தந்துள்ளார். அவற்றைப் பாதுகாத்துப் போற்றுவது அடுத்த தலைமுறையினரின் கடமையாகும்.
தமிழவையின் செயற்திட்டங்களில் எனது ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் நன்கறிந்த புலவர் அண்ணா என்னைத் தமிழவையின் தலைவராக இருந்து பணியாற்றுமாறு அனைத்துத் தமிழவையின் உறுப்பினர் முன்னால் கேட்டுக்கொண்டார். அந்த உரிமையில் என்னால் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்தளிக்கவும், மாணவச்செல்வங்களோடு இணைந்து பணியாற்றவும் வாய்ப்புக்கிடைத்தது.
அண்மையில் நான் நான்கு கவிதைப் புத்தகங்கள் வோல்தம்ஸ்ரோவிலும்ஈ கனடாவிலும் அரங்கேற்றினேன். இதில் உள்ள கவிதைகளில் பல தமிழவையின் நிகழ்ச்சிகளில் நான் படித்த கவிதைகளே. தமிழவை இன்றேல் இவ்வளவு கவிதைகளை எழுத எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்காது எனலாம்.
தமிழவை மிக நீண்ட காலம் சேவை செய்ய வேண்டும், பலவரண்ண நல்ல ஆராக்கியத்தோடு வாழ்ந்து இன்னும் பல படைப்புக்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் படைக்க வேண்டும் என்று அவர் போறுறிப்பரவும் அன்னை பராசக்தியை உளமார வேண்டுகின்றேன்.
அன்பே தமிழ் அதிலே அமிழ்.
இவ்வண்ணம்
கவிஞர் பாலரவி
02.10.2024

