தமிழ் மொழி ‘ஆன்ற தமிழ்’ என்று சிறப்பிக்கப்பெறுகின்ற ஒன்று. தமிழ் மொழி ஆக்கமுடையது என்ற பொருளில் அப்படிக் குறிக்கப்பெறுகிறது. தமிழின் ஆக்கத்தை இரண்டு முறைகளில் குறிப்பிடவேண்டும். காலந்தோறும் மக்கள் வாழ்வியல் சார்ந்து வளர்ந்து வருகின்ற நிலை ஒன்று. கருத்தியல் பதிவுகள் வகையில் மனித மனத்தைச் செம்மைபெறச் செய்கின்றநிலை மற்றொன்று.
‘நினைத்தல்’ என்ற அறிவுத் தொழிலுக்கு நிகழ்ச்சிகளோடு கூட மொழி கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த நினைத்தல் அழுத்தமாகத் தொழிற்படும்போது சிந்தனையாகிறது. இந்த அழுத்தமானது ஆளுமையை அறிவுசார்ந்த நிலையில் மனிதரை அடையாளப்படுத்துவது. இதனுடைய நீட்சியில் மனித அடையாளம் ‘நெஞ்சத்து அவலம் இவர்’ எனும் ஒரு தன்மையைக் கொண்டிலங்கவேண்டும். இதற்கான முயற்சிக்கு உரிமை உடையதாகவும் வழிநடத்துவதாக உள்ளது தமிழ் மொழி!
உலகம் பரந்து வாழ்க என்று புலம்பெயர்ந்து பணிசெய்யும் தமிழ் உள்ளங்களை இணைத்து ஆளுமையின் உன்னதத்தை உயர்வுபடுத்தவும் உறுதிப்படுத்தவும் எண்ணங்கொண்டு செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்ற அமைப்பாக ‘தமிழவை’ விளங்குகின்றது.
இலங்கைத் தாயகத்து உரிமை பேசிய மரபில்: உலகத்தமிழ் உண்மை உணர்த்தும் பணியில் சிறப்புறச் செயல்படும் புலவர் சிவநாதன் அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் பல. தமிழவையை முன்னெடுத்துச் செல்லும் அப் பணிகளால் தமிழர்தம் மனச் செம்மையும் வரலாற்று உரிமையும் சீர்பெறட்டும்.
தமிழவையின் வெள்ளிவிழா காணும் பயணம் தமிழர் வரலாறும், உரிமையும் பீடு பெற பங்களிக்கும் என்பதில் ஐயமில்லை. நலம் பொலிக!
நல்லூர்
சா.சரவணன்

