எனவே… பிரித்தானியாவைப் பொறுத்வரையில்…
தமிழ் மொழி ஓர் உணர்வுப்பொருளாகவே பரிணாமமடைந்துள்ளது என்ற பார்வையையும் யாம் தெளிவாக இன்று புரிந்துகொள்ள வாய்ப்புகள் நிறையவுள்ளன எனலாம்!
மேலும் புலம்பெயர் நிலங்களிற் தமிழ் மொழி வளர்ச்சியென யாம் நோக்க விழையுங்கால்… ஆராய முனையுங்கால்…
எமது தாயகங்களின்… தொப்புட்கொடியுறவுகளின்…அரசியல் சமுக பொருளாதார கல்வி.. கலை இலக்கியப் பண்பாட்டு வரலாற்று வாழ்வியல் நிகழ்வுகளையும் நிலைப்பாடுகளையும் இணைக்காமல்
எமது பார்வையையும் பணியையும் வெற்றிகரமாக ஆற்றலாமென யான் நம்பவில்லை!
1975இல் ஆயnஉhநளவநச நகரில் நடந்த துடுப்புப் பந்தாட்டத்தின்போது அவ்விளையாட்டுத்திடலில் ஈழத்தமிழ் மாணவர்களால் நிகழ்த்தப்பெற்ற ஆர்ப்பாட்ட அணிவகுப்பே யானறியப் பிரித்தானியாவில் நிகழ்ந்த முதல் தமிழர் எழுச்சிக் கோலமென நான் எண்ணுகின்றேன!
அதனைத் தொடர்ந்து… 1976. 77. 78களிலும் பல ஆர்ப்பாட்ட ஊhவலங்களும் கண்டனக் கூட்டங்களும் இலண்டனின் தலைநகரத்திற் பலதடவைகள் நிகழ்ந்ததன்மூலம்… தமிழ் மொழி… கலை… இலக்கிய
இயக்கத்திறகான அடிக்கற்கள் பிரித்தானியாவில் ஆங்காங்கே நாட்டப்பட்டு வரத்தொடங்கின எனலாம்!
எனினும்… 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரமும் அதன் தாக்கங்கங்களும் இடப்பெயர்வுகளுமே….தாயகத்தேசத்தமிழர்களை உலகத்மிழர்களாக்கிய ஒரு பேரவலம் என்பது ஒர் உலகவரலாற்றுப் பதிவாகும்! வீடிழந்து ஊரிழந்து நகரிழந்து நாடிந்து தவித்த ஒருதொல்குடியின் நாடி நரம்புகளில் தமிழுணர்வு குடங்குடமாக ஏற்றப்பட்ட காலம் இந்தக்காலம் என்பதை மறுப்தற்கில்லை!
1981இலிருந்து 1983ஜுலைமாதக் கடைசிவரை நான் லிபியாவிற் பொறியியலாளனாக வேலை பார்த்ததன் விளைவாக இலண்டனிற்கும் சிறீலங்காவிற்கும் லியிபியாவிலிருந்து எனது விடுமுறைகளிற் சென்றுவரும் வாய்ப்பு எனக்குக்கிட்டிற்று! கறுப்பு ஜுலையின் இறுதியில் நான் எனது தாயகத்திறகுச் சென்றபோது எரிந்து இடிந்து சரிந்து போன எமது தாயக பூமியையும் இன்னலிலும் இழப்பிலும் தோய்ந்து துவண்டு துடித்த எமது மக்களையும் யான் நேரிற் கண்டேன்!
தமது தாய்மொழிக்காகவும் தமது வரலாற்று வாழ்வுரிமைக்காகவும் அரசியல் இறையாண்மைக்காகவும் தம்முயிரையும் தமது தாயகவாழ்வையும் அர்ப்பணித் ஒரு மககளின் அவலக்குரல் விண்ணோங்க ஒலித்தது இந்தப் பேரழிவின்போதுதான் என்பதை எம்மால் உறுதிசெய்ய முடிந்தது!
வீடிழந்து ஊரிழந்து வாழ்விழந்து வழியிழந்து… உடைமைகளிழந்து நாடிழ்நது காடடைந்த வனவாச காலங்களும் யாழ்ப்பாண நூலெரிப்பும் புலம்பெயர்நிலத்தின் தமிழ்மொழி வளர்ச்சியை விரைவு படுத்தி விரிவுபடுத்திய உண்மையை யாம் மறந்துவிடுவதறகில்லை!
ஐக்கியராச்சியத்தைப் பொறுத்தமட்டில்…. தமிழர்கள் அகதிகளாகத் தம்மை அறிமுகப்படுத்தும் ஓர் அவலநிலைக்கு ஆளாகிய வரலாறு 1983இற்குப்பின்னரே ஆரம்பமானது!
அதற்கு முன்னைய காலப்பகுதிகளில்.. ஐக்கியராச்சியத்திற்கும்… உலகத்தமிழர்களுக்கும் தமிழுக்குமான தொடர்பும் உறவும் குறிப்பிடத்தக்க ஆழமும் அகலமும் கொண்டது என்பது எங்களிற் பலர் அறியாததல்ல!
எமது தாயகங்களில் எத்தனையோ அந்நிய ஆக்கிரமிப்புகள் காலங்காலமாக நடந்து வந்துள்ளன!
எனினும் கிழக்கிந்தியக் கம்பனி எனும் வர்த்தக வடிவில் எமது தாயகங்களை வந்து கைப்பற்றிய பிரித்தானியர்களுக்கும் எமக்குமுள்ள உறவு மிக மிக மாறுபட்டது என்பதனை வரலாறு கற்றுணர்ந்தோர் நன்கறிவர்!
ஆங்கில மொழியின் மோகமும் தாகமும் அன்றும் வேரூன்றியிருந்தது!
இன்றும் விழுதெறிந்து நிற்கிறது! இதனை ஒரு பலமாகவும் பார்க்கமுடியும்! பலவீனமாகவும் பார்க்கமுடியும் என்பதை நீங்களுணர்வீர்கள்!
மேலும்…
1800களிலிருந்து கலாநிதி ஆனந்தகுமாரசாமி… சேர் பொன் இராமநாதன் சேர் அருணாசலம் ராமநாதன்.. எனப் பலர் ஆங்கிலேயர்களுடனான ஆங்கிலக்கல்வி நிலைத்தொடர்பினை உருவாக்கியமை ஈண்டு குறிப்பிடத்தக்கது!
இதனைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எங்கள் மகாராணியாருக்குக் கணிதம் போதித்த பேராசிரியர் சுந்தரலிங்கம் மற்றும் எமது தாயகத்தின் ஜி ஜி பொன்னம்பலம் போன்ற பலர்
இந்நாட்டுடனான கல்விநிலைத் தொடர்புகளை மேன்மேலும் விருத்திசெய்துவந்துள்ளனர்!
மகாத்மா காந்தியவர்களின் தேசவிடுதலை ஆற்றுகைகளும் 1947- 48களின் இந்திய-இலங்கை சுதந்திர நிகழ்வுகளும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த பிரித்தானியாவிற்கும் எங்கள் தாயக தேசங்களுக்குமிடையிலான உறவுக் கொள்கைகளும் பல தமிழக மற்றும் ஈழத்தமிழர்களைப் பெரியபிரித்தானியாவின் அரசியல் பொருளாதார கல்வி வர்த்தக உறவுப் பின்னலுக்குள் ஈர்த்ததை எம்மாற் கண்டறியமுடியும்!
;எனவே…ஆங்கிலேயர்களைப்பொறுத்தவரை… ஒருகாலத்திற் தமிழர்களை ஒரு ‘கற்ற’ சமுதாயமாகக் காண்கின்ற நோக்கு… அவர்களிடம் இருந்துவந்ததை எம்மால் இனங்காணமுடியும்!
இதேவேளை ஆங்கில மொழியிற் பாண்டித்தியம் பெற்றவர்களையே கற்றறிந்தோரெனக் காணும் ஒரு மரபு எமக்குள்ளும் மண்டிக்கிடந்ததை யாம் மறுப்பதற்கில்லை!
எனவே ஈழத்தில் நிகழ்ந்த…1983இன் இனப்படுகொலையின் விளைவுகளாற்; பிரித்தானியாவிற்குள் அகதிகாளாக நுழைந்த புலம்பெயர்ந்த மக்களிற் பெரும்பாலானோருடன் தமிழ்மொழியுணர்வும் தமிழின தாயக உணர்வும் கூடிவரும் நிலையேற்பட்டதென உறுதியாகக்
கூறமுடிகிறது!
மேலும்…எமது தாயகங்களில்..ஆங்கிலேய ஊடுருவல்… எம்மோடு
இரண்டறக்கலந்துள்ள காரணத்தினால்.. ஐக்கிய ராச்சியத்திற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்குள்ளும் தமிழ்மொழி குறித்த ஒருசில தனித்துவமான சவால்களும் தலையெடுக்கத் தொடங்கின!
இவ்வாறான ஒருபின்னணியிற்றான் ஐக்கிய ராச்சியத்திற் தமிழ்மொழி வளர்ச்சியை யாம் கருத்திற்கொள்ள வேண்டியுளள்ளது!
1983இன் புலப்பெயர்வினுள் இன்னுமொரு பக்கவிளைவு ஏற்பட்டமை
ஈண்டு குறிப்பிடத்தக்கது!
இப்புலப்பெயர்வின்போது எமது தாயகத்திலிருந்து ஏராளமான ஆளுமைகளும் ஆற்றலும் அனுபவங்களும் சேர்ந்து புலம்பெயர்ந்தமை… தமிழ் மொழி கல்வி கலை இலக்கிய பண்பாட்டு விழிப்புணர்வு மற்றும் வளர்ச்சி குறித்த ஒரு தவிர்க்கமுடியாத நேர்மறையான நிலைமையைத் தோற்றுவித்தது எனலாம்!
தாயகத்தின் கல்வியளர்கள்.. கலைப்பெருமக்கள்… கற்றவர்கள்.. கற்பிப்பவர்கள்..கற்பித்தவர்கள்… கவிஞர்கள்.. எழுத்தாளர்கள்..பத்திரிகை ஆசிரியர்கள்… தொழிலதிபர்கள்… பட்டதாரிகள்… தொழில்.. வல்லுனர்கள்… இளைப்பாறிய உத்தியோகத்தர்கள் என… மொழியுணர்வும் கல்வியறிவும் கொண்ட பெருந்திரளான தமிழ்மக்கள் இப்புலப்பெயர்வின்போது பிரித்தானியாவிற்கு வந்து சேர்ந்தனர்!
மேலும் எத்தனையோ இழப்புக்களைத் தமது வாழ்வில் அனுபிவித்த மிகவும் கலிவி கலை இலக்கிய பண்பாட்டு வரலாற்று வேரிலிருந்து வளத்திலிருந்து பிடுங்கியெறிப்பட்ட ஒரு மக்களின் கூட்டமே 1983இன்
இக்கலவரத்தின் விளைவாக ஏற்பட்ட ஒரு புலப்பெயர்வுக்குள்ளாகியதென்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பதிவாகும்!
இந்த மக்கள் நீரோட்டமே புலம்பெயர்நிலங்களிற் பொதுவாகவும் பிரித்தானியாவிற் குறிப்பாகவும் தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஒரு புதுயுகத்தைத் தோற்றுவித்ததெனலாம்!
1974இல் நான் கண்ட பிரித்தானியாவிற்கும் 1983இற்குப்பின் நான் கண்ட பிரித்தானியாவிற்கும் பலநூறு விழுக்காடுகள் மாற்றததை எம்மால் உணரக்கூடியதாக இருந்தது! இம்மாற்றததின் தாக்கங்களையும் தார்ப்பரியங்களையும் தனிமனித…குடும்ப… சமூக… அரசியல்… பொருளாதார நிலைகளிலெல்லாம் யாம் தெளிவாகக் கண்டுகொள்ளக்கூடியதாகவும் இருந்தது!
இம்மாற்றங்களின் பிரதிபலிப்புகளாகக் கல்விக்கூடங்களும் கலைக்கூடங்களும்…பயில்நெறி… பட்டறைப் பயிற்சி நிலையங்;களும் சமய தாபனங்களும் பத்திரிகை புதின மற்றும் வானொலி தொலைக்காட்சி ஊடக நிலையங்களும் பதிப்பகங்களும்… மக்கள் கழகங்களும்… வர்த்தக நிறுவனங்களும்…. நவீன தொழில் நுட்ப கணனி இணைய மையங்களும்… முதியோர் இல்லங்களுமென தமிழ் மொழி வளர்ச்சிக்கான தலங்களும் களங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு நிலை உருவாகியது!
பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் யாம் இந்த நாட்டின் முடிக்குரிய மாண்பமை மகாராணியாரின் அரசிற்கும்
இந்நாட்டின் சுதேசக் குடிமக்களுக்கும்
பெருநன்றிக்கடனுள்ளவர்களாகவே இருக்கின்றோம்! யாம் மிகவும் சுதந்திரமாக எமது உணர்வுகளையும் வலிகளையும் வெளிப்படுத்தக்
கூடிய வாய்ப்பு வசதிகளை இவ்வரசு தொடர்ச்சியாக தமது சட்டவரப்புகளுக்குள் நின்று கொண்டு அளித்துவருகிறது! கல்வி பொருளாதார வர்த்தக ஊடக உரிமைகள் மற்றும் தனிமனித சமுக தேச நிலைகளிலும் இந்நாட்டின நியமங்கள் நியதிகளுக்கமைய எமக்கான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவி வருகின்றன! எனினும் தமிழ் மொழி மொழிக்கல்வி…கலை இலக்கியம் பண்பாடு குறித்த வளர்ச்சியிற் தமிழர் சமுதாயம் தமது சொந்தக் காலிலேயே நின்று முன்னேறுவது ஈண்டு குறிப்பிடத்தக்கது!

