ஈழத் தமிழர்களின் கண்ணீரும் செந்நீரும் நூலில் பக்கத்துக்கு பக்கம் எழுத்துக்களாக தெளிக்கப்பட்டிருந்தன. அவை வலி மிகுந்த தாக்கத்தையும் துக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தி இருந்தன. இந்நூல் அருள் என்ற வாடகை மகிழுந்து ஓட்டுனர் வழியாக இராணி மைந்தனுக்கும், புலவர் ந.சிவநாதன் இந் நூலை திரு அருள் அவர்களுக்கு வழங்கியதாகவும் தெரிந்தது.
இரண்டனை வசிப்பிடமாகக் கொண்ட புலவர் ஆண்டுக்கு ஒருமுறை சென்னை வரும்போது அருள் அவர்களின் வாடகை மகிழுந்தை தான் பயன்படுத்துவர் எனவும் அறிந்து அருள் அவர்கள் வாயிலாக ஒரு பொன்னான மாலைப்பொழுதில் புலவரை நான் சென்னையில் சந்தித்தேன். முதல் சந்திப்பில் அவருடைய கவித்துவமான இலங்கை பேச்சு என்னைக் கவர்ந்தது. இயல்பாக அவர் பேசுவதை அப்படியே எழுதினால் அதை ஒரு கவிதை நூலாக உருவாக்கலாம். அந்தக் காலகட்டத்தில் நான் தியாகராஜ நகர் பர்கிட் சாலையில் நவரத்தினம் என்ற பதிப்பகம் நடத்தி வந்தேன். புலவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நூலை தயாரித்துக் கொடுக்க சம்மதித்தேன். புலவர் இலண்டன் திரும்பி மறுவாரம் மின்னஞ்சல் வழியாக அவர் கைப்பட எழுதிய படிகளை அனுப்பி வைத்து ‘ நான் அனுப்ப அனுப்ப தட்டச்சு செய்து வையுங்கள் விரைவில் அனைத்தையும் தொகுத்து நூலாக உருவாக்கலாம்’ என்றார். அவருடைய எழுத்து நிறுவன தட்டச்சாளரான செல்வன் அவர்களுக்கு புரியாமல் தடுமாறினார். இருப்பினும் போகப் போக அவர் எழுத்துக்களை இலகுவாக தட்டச்சு செய்தார். 500 பக்கங்களைக் கடந்த நிலையில் அந்நூலுக்கு ‘ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்’ என பெயர் வைத்தார். தொல்லியல், நிலவியல், கடலியல், வரலாறு என பல தலைப்புகளைக் கொண்ட ஆய்வு நூலாக தொகுத்து உருவாக்கினேன். அச்சுப்படியாக்கி 500 படிகளை கப்பல் வழியாக இலண்டனுக்கு அனுப்பினேன். நூலைப் பார்த்து முழு மன நிறைவு கொண்ட புலவர் அவர்கள் அதன் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த விரும்பினார். அந்தப் பொறுப்பும் என் மீது சுமத்தப்பட்டது. இலக்கிய வீதி, சோழமண்டல மக்கள் நல வாழ்வு சங்கம், ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து சென்னை கன்னிமாரா நூல் நிலையத்தில் வெளியீட்டு விழா நடத்தியது. சிலம்பொலி செல்லப்பன், தங்கர் பச்சான், பாரிஸ் ஜமால், வைர சேகர், ஆனூர் ஜெகதீசன், த மிச்சாண்டி, இ.அ.ப இராணிமைந்தன் போன்ற பெரும் திரளான தமிழறிஞர்கள் உழவரை வாழ்த்தி பேசினார்கள். அதன் பிறகு புலவர் தமிழகத்தில் பலராலும் பேசப்பட்ட எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்டார். ” ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்” தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களுக்கு மேற்கோள் நூலாக பயன்பட்டது.
இலண்டனில் தமிழவையை நிறுவி 25 ஆண்டுகளாக பல்வேறு தமிழ்ப் பணிகளை செய்து வரும் புலவர் அவர்கள் பன்முக ஆற்றல் கொண்டவர். அன்னாரின் வேர் கட்டிட பொறியியல் என்றாலும் அந்த வேரிலிருந்து கிளைத்தெழுந்த மரம் இலக்கியம், வரலாறு, நாடகம், ஆராய்ச்சி எனும் பல கிளைகளாக வளர்ந்துள்ளன. உழவர் அவர்கள் இயற்கையை, இறைவனை பாடும் போது கூட அவற்றில் எதார்த்த உண்மைகளை வெளிப்படுத்துவார்.
2012 ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணா மலைபுரம் செட்டிநாடு ஆசிரமம் பள்ளியில் ‘ பஞ்சலீலை” வென்ற தன் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார். தமிழ்நாடு அரசு உலகத் தமிழ் சங்கம் சார்பாக அந்நிகழ்ச்சியை நடத்த நான் ஏற்பாடு செய்திருந்தேன். இலண்டனில் இருந்து 20க்கும் மேற்பட்ட மாணவிகள் வந்திருந்து பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு நாட்டியம் ஆடினார்கள். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த திரு. கே.சி. வீரமணி, அரசு செயலாளர் முனைவர் மு இராசாராம், இ.அ.ப போன்ற ஆளுமைகள் புலவருக்கு …………….. என்ற விருதை வழங்கி சிறப்பித்தார்கள்.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலிலும் “சிவகங்கை செந்த” என்ற நாட்டிய நாடகத்தை நடத்தி தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பெரும் பங்களிப்பை வீரமங்கை வேலுநாச்சியாரைக் கொண்டு வீரமும் தியாகமும் கொப்பளிக்க நடந்த அந்த நாட்டிய நாடகத்தில் புலவர் எழுதிய பாடல் வரிகள் பலரை உணர்ச்சி வசப்பட வைத்தன. என்னுடைய ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் நடந்த புலவரின் நிகழ்ச்சிகளால் எனக்கும் நற்பெயர் கிட்டியது.
இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுதிய பாரதியைப் போல,ஈழ விடுதலைக்காக இலங்கை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பாடல் எழுதிவரும் புலவரை ஈழத்துப் பாரதியார் என்றே அழைக்கலாம். தனி ஈழம் கிட்டும்போது புலவரின் பாடல்கள் உலகத் தமிழர்களால் போற்றப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
புலவர் அவர்களால் நிறுவப்பெற்ற இலண்டன் தமிழவையை தமிழ்நாட்டு மாணவர்கள் பின்தொடர்கிறார்கள். தமிழவையின் தமிழ்நாட்டு கிளை அமைப்பாக செந்தமிழ் திருத்தேர் தூயதமிழ் மாணவர் அமைப்பு செயல்படுவது இளைஞர்களிடையே புலவரின் பாடல்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை உணரமுடிகிறது.
உலகப் போற்றும் உத்தமப் புலவர் ந.சிவநாதன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து உணர்ச்சி மிக்க தமிழர்களை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டும் என இறைஞ்சுகின்றேன்.

