அன்பே தமிழ்! அதிலே அமிழ்! ” அன்பே தமிழ்! அதிலே அமிழ்!” என்பது ஒரு வார்த்தை வண்ணம் அல்ல. அரங்கிலும், அலையிலும், இயல் இசை நாட்டிய கலையிலும் அக ஒளி பரப்பி ஒளிரும் அறம் சார்ந்த அமைப்பாய் நிலைத்து நின்று தனது 25 வது ஆண்டினை கொண்டாடும் ” தமிழவையின்” குடும்பத்தினரின் தந்தையும் தாயுமான புலவர் நல்லதம்பி சிவநாதனின் இதயத்துடிப்பின் நாத ஒலி. ( ரீங்கார ஓசை)
தனது தாய் மொழியையும் தன் இனத்தையும் எவன் அன்பு செய்கிறானோ அவன் இதயம் இப் பூமிப் பந்தில் வாழும் ஒவ்வொரு மனிதனதும் நலம் சார்ந்தும், அறம் சார்ந்துமே துடிக்கும். புலவரின் இதயத்துடிப்பும் அதுவே. உலகில் எங்காவது விடுதலைக்காக எங்கும் மனிதனுக்காக உனது இதயம் துயருறுகிறதா? அப்படியானால் நீயும் நானும் தோழர்களே’… என்றான் சேகுவாரா.
பிறர் மீது அன்பு செய்வது தான் உனது பலவீனமாக இருந்தால் நீ தான் இந்த உலகத்திலேயே அதிசிறந்த பலசாலி என்றார் அன்னை தெரேசா. இவர்களைப் போன்று அன்புக்காகவும், நீதிக்காகவும், உரிமைக்காகவும் இறங்கு போரின் குரலாக எழுச்சி கொண்டு அர்ப்பணிப்போடு செயலாக்கம் பெற்று நிற்பதே தமிழவை!
2024இற் தனது 25ஆவது ஆண்டை நிறைவு செய்யவிருக்கும் தமிழவையின் ஊற்றாக, தலைமை துணாக நின்று அநீதிகளுக்கு எதிராக தனது கலை இலக்கியப் படைப்புக்களால் வாழ்ந்து கொண்டிருப்பவர் புலவர்.
2016ல் ‘உடல் அரங்கியல் இதழ்;’ கலைகளின் காப்பகமான பாரிஸ் மாநகரில் ( குசயnஉந – Pயசளை) நடாத்திய” உலகத்தமிழ் நாடகவிழா ” மிகுந்த வரவேற்பையும், வெற்றியையும் பெற்றிருந்தது. அதுபோல அடுத்த உலகநாடக விழா எங்கே, எப்போ என்ற கேள்வியையும் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பியிருந்தது. நாடக அரங்காளர்கள், ஆற்றுகையாளர்கள் தந்த ஊக்கம், ஆதரவு காரணமாக 2வது உலகத்தமிழ் நாடக விழாவை உலகளாவிய மக்களின் கனவு பூமியான இலண்டன் ( டுழனெழn) மாநகரில் நடத்துவதற்கான எண்ணம் உதயமாயிற்று. அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்காக அங்கு சென்றிருந்தபோது பலர் எமக்கு உதவ முன்வந்தார்கள்.
சிலர் தூண்களாக நின்று எம்மைத் தாங்கிக்கொள்ளவும் தமது விருபத்தினைத் தெரிவித்தார்கள். அந்தத் தூண்களில் எமக்கு உதவிட தம்மையும் எம்மோடு இணைத்துக் கொண்டு தனித்துவமாக நின்றவர் புலவர் அவர்கள். இலண்டன் உலகநாடகவிழாவின் வெற்றிக்கு அவர் அருளிய பணி அளப்பரியது. காரணம் அவர் தமிழ்ப்பால் பருகிப் புலமைபெற்ற புலவர் மட்டுமல்ல கற்றுத்தேறிய பொறியியலாளர். இவை இரண்டிற்குமேலாய் அவருள் அவராய் நின்று அவரை இயக்குவது தமிழும் ,தமிழின்பால், தமிழினத்தின்பால் அவர் கொண்டிருக்கும் அன்பும் பாசமுமே! அதன் வெளிப்பாடே அவர் ஒரு நாடகர். நாடகக் கலை அவரின் சுவாசமாயிற்று.
யதார்த்த, இசை, நாட்டிய, புதிய முயற்சி நாடகப் படைப்புக்களாக அவர் எழுதியவை, ஆற்றுகைப் படுத்தியவை இதுவரையில் அறுபதுக்கும் மேற்பட்டவை. அத்தனையும் எம்மவர்களின் சமகால வாழ்க்கைச் சூழமைவுகளையும், துயரங்களையும் அதற்கான விடிவினையும், மீட்ச்சியையும் பெறுவதற்கான எதிர்நோக்குச் சிந்தனைகளையுமே கொண்டிருந்தன.
இத்தகைய தகைமை மிகு பெருமகனாரோடு….
ஆறு வருடங்களைக் கடந்து நிற்கிறது எனக்கும் அவருக்கும் ஆன தோழமை. நாம் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு கணப்பொழுதும் இருவரினதும் நினைவுகளும் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் தூரத்துப் பார்வைகளும் ஒருமித்து நிற்கும். இன்னமும் சொல்வதானால் அந்தப் பொழுதுகளில் அவரிடம் நான் கற்றுக் கொண்டவையே அதிகம். பல்துறை சார் அறிவாளன், ஆய்வாளன், படைப்பாளன், பகிர்ந்தும் அறிந்தும் ஆற்றுகைப்படுத்தும் செயற்பாட்டாளன், மாற்றான் முற்றத்து மல்லிகை வாசத்தையும் விரும்பி நுகர்வோன், தனது கவி வரிகளால் ஊக்கம் தந்து அவர்கள் உயர்வு கண்டு மனதார மகிழ்வோன், இன்னும் இன்னுமாய்…. புலவர்.
பலர் சிந்திக்க வேண்டியதை ஒருவன் சிந்தித்தால் அவன் அறிஞன். சிந்தனையை அழகாகச் சொல் வைத்தால் அவன் கவிஞன். அவன் தான் என்றும் என் அன்புக்கு இனிய தோழமை புலவர் நல்லதம்பி சிவநாதன்.
வாழ்த்துக்கள் எனது அன்புக்கு இனியவனே! இல்லை இனியவரே! உங்கள் தமிழை குடும்பத்தினரோடு சமூக ரீதியோடும் தமிழின உணர்வோடும் விடுதலை வேட்கையோடும் எழுங்கள் எழுச்சி கொண்டு எழுங்கள் பதிவிடுங்கள் உங்கள் படைப்புகளை எதிர்காலம் பயன்பெறவே!!
என்றும் அன்புடன்
நாடக நேசர்
எம் அரியநாயகம்

