நாமெல்லோரும் புலவர் அங்கிள் என அழைத்து தமிழும் கலையும் அவரிடம் கற்ற காலங்கள் சிலவாக இருந்தாலும் மிகப்பெரிய ஆளுமையுடன் அந்த குறுகிய காலங்களில் பயணித்தமை எமக்கு மிகப்பெரிய அனுபவங்களைத் தந்தது.
இந்தப் புலம்பெயர் தேசத்தில், தமிழ்த் தேசியக் கருத்துக்களை கலை வடிவங்கள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்ற வரலாற்றுப்பணியில் இவரது பங்கு மிகப்பெரியது, முதன்மையானதும் கூட. இவரது எழுத்திலும் பேச்சிலும் ஆற்றலிலும் கொழுந்துவிட்டு எரியும் தமிழ் தேசியக்கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். இவரது நூல்களை வாசிப்பதில் தனிப் பிரியமுண்டு.
“ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்” – இந்த நூலை படிக்கின்றபோது ஒரு புதுவித அனுபவம் கிடைத்த உணர்வு. இவரது இந்த நூலுக்கான சமர்ப்பணம் கூட மீள மீள வாசிக்கத் தூண்டுவதுடன் ஏதோவொன்றை சிந்திக்கவும் தூண்டுகின்றது. அந்த நூல் இவரது கையெழுத்துடன் எனக்குக் கிடைத்த அன்புப் பரிசு.
இவரது பாடல்களில் துலங்கி நிற்கும் தாய்மண்ணின் பாசம் ஆன்மிகப் பாடல்களையும் விடவில்லை. காலத்தால் அழியாத சிகரம் தொடும் பாடல் “ஓங்கார ஒலியில் உலகாழும் கருணை பூங்கோதை நாகம்மா சரணம்…” இந்தப்பாடலை ஒருமுறை முழுமையாக கேளுங்கள்.. எம் நெஞ்சைத் துளைத்து இதயத்தை வருடி மகிழ்வையும் துயரையும் தரும். எப்படியிருந்த நிலத்தை இப்படித் தொலைத்து நிக்கின்றோம் என்ற துயர் மனசை அறுத்துஎடுக்கும். நாம் எழுச்சியுடன் இருந்த காலத்திலும் பொருந்தும் இன்று வீழ்ச்சியுற்று குறுகி நிற்கும் காலத்திற்கும் பொருந்தும். “அரசாண்டு புகழ்கொண்ட இனத்தை எந்தப் பகைவந்தும் அசைக்காது என நின்றோம் அம்மா…” இந்த வரிகள் சாகா வரம்கொண்டவை…..
நீங்களும் கேளுங்கள். அற்புதமான வரிகள், இப்படி இவரது படைப்புக்களை பேசிக்கொண்டு போகலாம். இவரது ஒரு நாடகத்தில் இணைந்தமை பெரும் அனுபவம்.
அறுபது ஆண்டுகள் என்ற பெரும் பயணத்தை எண்ணற்ற சாதனைகளுடன் கடந்து நிற்கும் எங்கள் புலவர் அங்கிளுக்கு பெருமைகொள்ளும் வாழ்த்துகள்.
அன்புடன்
சுப்ரம் சுரே~;

