அவர்களின் இப்பெரும் முயற்சியில் அடியேனும் அவ்வப்போது ஒரு அணில்போல என் சிறு பங்கை வழங்கி ஆசிரியையோடு இந்த நாட்டிய நாடகப் பயணத்தில் பயணித்ததால் அந்த அணிலின் பார்வையையும், அதேவேளை இந்த நாட்டிய நாடகத்தில் துர்வாசர் மற்றும் பரசுராமர் ஆகிய முனிவர்களின் இரட்டை வேடங்களை ஏற்றுக்கொள்ளும் பெரும் வாய்ப்புக் கிடைத்ததால் ஒரு நடிகையின் பார்வையும், அதற்கும் மேலாக நான் என்றென்றும் பிரியப்பட்டு ஏற்கின்ற பொறுப்பான ஒரு பார்வையாளரின் பார்வையையும் கலந்து இங்கே உங்களோடு சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று விழைகின்றேன்.
புலவர் சிவநாதன் அவர்களுடைய அழகான, உணர்வுபூர்வமான எழுத்து என்னை ஒரு நண்பனின் நிலையிலிருந்து யோசிக்கவைத்து முதன்முறையாக துரியோதனனுக்காகவும் என் கண்களைப் பனிக்க வைத்தது என்றால் அவரின் எழுத்தின் வீரியத்தைப் பற்றி மேலும் சொல்ல வேண்டியதில்லை. திரு யாதவன் அவர்களின் கவர்ச்சிகரமான இசையமைப்பிலும், குரலில் மேலும் மெருகேறிய இந்த நாட்டிய நாடகத்தை ஆசிரியை திருமதி சுஐந்தினி மகேஷ்வரன் அவர்கள் மிகவும் அருமையானமுறையில் இயக்கியிருந்தார். இவர்களோடு மிக மிக அருமையாக இசைக்கலைஞர்கள் தமது இசையால் பங்குபற்றிய மாணவர்களையும் பார்வையாளர்களையும் தம் வசப்படுத்தி தம் கட்டுக்குள் வைத்திருந்தார்கள்.
மகாபாரதம் என்பது ஒரு மாபெரும் ஆழ் கடல். மகாபாரத்தில் வருகின்ற பாத்திரங்களைப் பற்றி உணர்ந்தும் புரிந்தும் கொள்வதென்பது
அந்தக் கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பது போன்றதானது. குறிப்பாக ஒவ்வொரு வித்தியாசமான பராயத்திலும் நாம் இந்த இதிகாசத்தினை படிக்கின்றபோது எமக்கு வித்தியாசமான புரிதல்கள் ஏற்படும். எமது வாழ்க்கை அனுபவமே, இந்த இதிகாசத்தில் வருகின்ற பாத்திரங்களுக்கான குணாதிசயங்களையும் அவர்களின் நியாயங்களையும் எமக்கு புரிய வைக்கும். இது இவ்வாறிருக்க, இரவிமைந்தனைப் பற்றிய இந்தப் படைப்பை இங்கே மேலை நாட்டில் மேலைநாட்டுக் கலாச்சாரத்தின் நடுவே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் சிறு பிள்ளைகள் மூலம் உணர்வுபூர்வமாக ஆற்றுகைப்படுத்துவதென்பது நினைக்கும் அளவிற்கு சாதாரண விடயமல்ல.
நாடகமாயினும் சரி நாட்டியமாயினும் சரி, ஒவ்வொரு பாத்திரங்களின் குணாதிசயங்களையும் பாத்திரங்களை ஏற்பவர்கள் முதலில் புரிந்து கொண்டிருந்தல் வேண்டும். அடுத்து அந்த பாத்திரங்கள் இன்னோர் சந்தர்ப்பங்களில் எவ்வாறு சிந்தித்திருப்பார்கள் என்பது மட்டுமன்றி, அவர்களுடைய முக பாவனைகளும் அங்க அசைவுகளும் ஒவ்வோர் சந்தர்ப்பங்களிலும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் நன்கு சிந்தித்தே வெளிப்படுத்த வேண்டும். சொல்லப்போனால் உள்ளத்தில் அந்தந்த பாத்திரங்களாகவே மாறினாலே ஒழிய, சிறந்த நடிப்பினை வெளிக்கொணர முடியாது. அந்த வகையிலே புலவர் சிவநாதன் அவர்கள் ஒவ்வொரு பாத்திரங்களையும் காட்சிகளையும் பற்றி கொடுத்த நூதனமானதும் நுண்ணியதுமான விளக்கங்களை ஆசிரியை அவர்கள் மனதில் உள்வாங்கி, அவற்றை சிந்தாமல் சிதறாமல் அப்படியே தன் மாணவர்களுக்கு சிறப்பானமுறையில் கற்றுக்கொடுத்திருந்தார். ஆறு வாரங்களில், ஏறக்குறைய நாற்பது மணர்களை பயிற்றுவித்ததென்பது மிகப்பெரும் சாதனை. இதை அவர் ஒரு சவாலாகவே ஏற்று நடத்தி முடித்தார். வயதில் மிக சிறியவர்களாக இருந்தாலும் இரண்டு முறை மட்டுமே இசைக்கலைஞர்களுடனான ஒத்திகை பார்த்துவிட்டு தமது பாத்திரங்களுக்கேற்ப பொறுப்பை ஏற்று மிக மிக அருமையாக பார்வையாளர்களுக்கு ஒரு பெரு விருந்தினை வழங்கியிருந்தார்கள் ஆராதனா நாட்டிய கல்லூரியின் மாணவர்கள்.
பெற்றோர்களாக பெரும்பாலும் நாங்கள் அனைவருமே எம் பிள்ளைகள் முடிந்தவரை எமது கீழைத்தேய கலைகளை பயிலவேண்டும் என்ற ஆவலோடு எமது நேரமின்மையையும் பொருட்படுத்தாது பயிற்றுவித்துக்கொண்டுதான் வருகின்றோம். அப்படியிருந்தும் இவ்வாறான பிரத்தியேகமான நிகழ்வுகளுக்காக பிள்ளைகளை மேலதிக பயிற்சிகளுக்காக அழைத்துச் செல்வதென்பது அலைச்சல் போலத்தான் அவ்வப்போது தோன்றும். ஆயினும் இவ்வாறான நிகழ்வுகளூடாகத்தான் எம் பிள்ளைகள் கலைகளை பயில்வது மட்டுமன்றி எமது கலாச்சாரத்தையும் அறிந்து கொள்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விடயம். அது மட்டுமன்றி, வெகு வேகமாகச் செல்லும் வாழ்க்கையில் எம் பிள்ளைகளுக்கு இளம் பராயத்திலேயே இப்படிப்பட்ட மேடையனுபவங்களை நாம் ஏற்படுத்திக்கொடுத்தல் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், தம்மைப்பற்றிய மேன்மையான எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவும்.
அந்தவகையில், இரவிமைந்தன் நாட்டிய நாடகமானது பார்வையாளர்களை கவர்ந்த ஒரு நிகழ்வாக மட்டுமல்லாது பங்கு கொண்ட மாணவர்களின் மனதிற்கும் ஒரு புத்துணர்வு வழங்கியதை என்னால் நன்றே கண்டுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. எமது இளம் சந்ததிக்காகவே இவ்வாறான நாட்டிய நாடகங்கள் எம்மத்தியில் இன்னுமின்னும் மேடையேற்றப்படவேண்டும். ஏற்றப்படும் என்ற நம்பிக்கையோடு நிறைவு செய்கிறேன்.
நன்றி
அஞ்சு ராமதாஸ்

