வெள்ளி விழாக் காணும் தமிழவை என்றும் வாழ்க !
வந்த இடத்தில் வருமானம் தனைப் பெருக்கி
எந்த நிலைவரினும் இறங்கிடா அளவினிலே
சொந்த வாழ்க்கையைச் சொர்க்கமென ஆக்கப்
பந்த பாசம் எல்லாம் பணம் என்று பலர் வாழ…..
எந்த நிலைமையிலும் எம்மூச்சுத் தமிழ் என்றும்
நொந்து வந்தாலும் நோகவினி விடோம் என்றும்
சிந்தை தனில் உறுதி திடமாகத் தாம் பூண்டு
தந்தார் தமிழவையைத் தகுதியுளோர் சிலர் கூடி!
முந்தைத் தமிழ்தன்னை முழுதான இன்சுவையை
வந்த இடத்து உதித்த வருங்காலச் சந்ததிக்கும்
தந்து தரம் உயர்த்தித் தமிழோடு தமிழர் இங்கு
சொந்த உறவு பூண்டு சொர்க்கநிலை தாம் காண
எந்தத் தன்னலமு மின்றி எப்போதும் உழைத்து
இந்தக் கணம் கண்டார் இருபத்தைந்து அகவை
முந்தைத் தமிழ் தந்த முக்கண்ணன் அருளோடு
எந்தக் காலமுமே எக்குறையும் இங்கில்லாமல்
வாழ்க வளம் ஒங்க வருங்கால எம் சிறாரும்
வாழ்க தமிழ் பேணி வளர்க தமிழ் ஆய்ந்து
சூழ்க இன்பநிலை சுடர்க தமிழீழம்!
வாழ்க தமிழவை! வாழிய வாழியவே!
பாவலர் க. இராஜமனோகரன்

