அன்பே தமிழென்றார்
அதனில் அமிழென்றார்
இதனால் நாமிணைந்தோம்
இன்புமும் நாமடைந்தோம்
அறிவால் வயதால்
அன்பால் அனுபவத்தால்
உயர் தமிழ் அறிவால்
உயர்வாய் நீற்கின்றீர்கள்
உண்மை நட்பினில்
உருகி நிற்பவர்
பணமதனைப் போற்றாமல்
பண்பதனைப் போற்றுபவர்
மொழியால் உணர்ந்தோம்
தந்தையர் வழியாலிணைந்தோம்
கொள்கையில் ஒன்றானோம்
குணத்தால் நட்பானோம்
இடையிடையே தொடர்புகள்
இல்லாது போயினும்
ஊடல்கள் கொள்வதும்
உடன்பின்னால் கூடல்கொள்ளலும்
கூடிக் குலவுதலும்
கொண்டாடி மகிழலும்
குணமாகக் கொண்டவர்
கெட்டதில்லை பிரிந்ததில்லை
அறுபதாண்டு இலக்கியப்பயணம்
அறத்துடன் தொடர்ந்துநடந்திட
விருப்புடன்நானும் வாழ்த்துகிறேன்
வாழ்க வாழ்க பல்லாண்டு.
புலவரண்ணாவின் எழுபதாம் அகவை நிறைவின்போது , நான் அவரிற்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்தினை, கீழே பதிந்து மகிழ்கின்றேன்
நூறாண்டு வாழ்க வாழ்கவே
—————————————-
பாரதத்தாய் சுதந்திர நாளதனில்
பாரினில் நீங்கள் பிறந்தீர்கள்
தமிழன்னை அடிமைத்தளை நீக்கிட
தமிழால் அறப்போர் புரிந்தீர்கள்
விடுதலை உணர்வுடனே எந்நாளும்
வேட்கையுடன் கவிகள் புனைந்தீர்கள்
பாவினினால் படைகண்டு நின்றீர்கள்
பாரினில் புகழோடு வாழ்ந்திடுகவே
முத்தான நற் கவிதைகளை
வித்தாக விதைத் துள்ளீர்கள்
சத்தாகப் பெற் றிவர்கள்
சொத்தாகப் போற் றிடுவர்
எழுபது ஆண்டுகளைச் சிறப்பாய்
அகிலத்தில் கண்டிட் டீர்கள்
மூபத்தாண்டு மேலும் கண்டு
நூறாண்டு வாழ்க வாழ்கவே.
அன்புடன்
வேந்தனார் இளஞ்சேய்
தமிழர் தொன்மை பரப்பிடும் தமிழவை
தமிழவை தனது 25 ஆவது ஆண்டின் நிறைவினைக் கொண்டாடவுள்ளதை அறிந்து மன மகிழ்வடைகின்றேன். அதன் வெள்ளிவிழா மலரிற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் அகமகிழ்வடைகின்றேன்.
புலம்பெயர் நாட்டில், எமது மொழி – பண்பாட்டு விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்து ஆவணப்படுத்தி – அதை எம் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பரப்பிட – வளர்த்திட, ஒரு தாபனத்தைத் தொடங்கி, அதை 25 வருடங்களாக தொடர்ந்து நடத்திவருவது என்பது இலகுவான காரியமல்ல. இதற்கு தமிழ்மொழிமேல் ஆராப்பற்றும் , காதலும், தமிழ்மொழியறிவும், தொண்டு மனப்பான்மையும் வேண்டும். தடைகளைக்கண்டு தளர்வடையாது , கொண்ட கொள்கைக்காக, ஆரம்பித்த நோக்கத்திற்காக ,இடையறாது உழைத்திடும் உளவுறுதி வேண்டும்.
இத்தனை தகமைகளையும் கொண்ட புலவர் சிவநாதனால் வழிநடாத்தப்படும் தமிழவை , கடந்த 25 வருடங்களில் பல மேடை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது. பல இளையோரின் கலைநிகழ்வுகளை மேடையேற்றியுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டிலும், தமிழவையின் கலைக்குழு சென்று, இளையோரை வைத்து சிறப்பான நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது.
அத்துடனல்லாது கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் , மெய்நிகரூடாக , பல தமிழறிஞர்களை அழைத்து, பயனுள்ள பல நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது.
இவ்வாறு புலம்பெயர் மண்ணில் , தன் சேவைகளால் தடம்பதித்து இயங்கிவரும் தமிழவை, வெள்ளிவிழா காணும் இவ்வேளையில், அது தொடர்ந்தும் தனது சேவையைத் தமிழுக்கும் தமிழ் மக்களிற்கு ஆற்றி,“தமிழர் தொன்மை பரப்பிடும் தமிழவை” ஆக இயங்கிட வாழ்த்தி விடைபெறுகின்றேன்
நன்றி
அன்புடன்.
வேந்தனார் இளஞ்சேய்
இலண்டன்
11.07.2024

