சிவநாதன் மாமா, உங்கள் 60ஆண்டு கலைப் பயணத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 60 ஆண்டுகளும் கலைப் பயணத்தில் உங்களுடன் பயணிக்காவிட்டாலும் உங்களை எனக்கு ஏறக்குறைய எனது 15 வயதிலிருந்து நன்கு அறிந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நாளைய சந்ததி என்ற இலங்கை வானொலி நிகழ்ச்சியில் உங்களை முதன்முறையாக சந்தித்ததை நினைவு கூர்ந்து பார்க்கிறேன். அந்த நாட்கள் நெஞ்சில் வந்து அலைமோதிச் செல்கின்றன. அப்போது நான் பிற்காலத்தில் அகிலம் புகழும் ஒரு பெரும் புலவருடன் பழகு கிறேன் என்று அறிந்திருக்கவில்லை.
சிவநாதன் மாமாவின் நீண்ட 60 ஆண்டு கலைப் பயணத்தில் அவரின் நாடகப் படைப்புகளில் சிறிது தூரம் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு எனது நன்றிகள். அவரின் நகைச்சுவை கலந்த யதார்த்தமான சமூக விழிப்புணர்வை தட்டியெழுப்பும் நாடகங்கள் என்றும் என் நினைவை விட்டு நீங்கா. ‘நான் ஊருக்கு போறன்’ என்ற நாடக மூலம் முதன்முறையாக நான் நாடகத்துறையில் அவருடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்து அவருடைய படைப்புகளான யாதும் ஊரே யாவரும் கேளீர், தமிழ் மணம். .உழஅ, திரிசங்கு சொர்க்கம், விழிப்பு, உயில் என்று தொடர் நீண்டது. எனக்குள்ளும் நடிப்பாற்றல் இருக்கிறது என்பதை வெளிக்கொணர்ந்தவர் சிவநாதன் மாமா. நாடகங்களை எழுதி நெறிப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தவர். அவருடைய நாடகங்கள் அனைத்துமே நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் சமூக விழிப்புணர்வை தட்டியெழுப்பும் விதமாகவும் அமைந்திருக்கும் என்று கூறினால் மிகையாகாது. அந்த வகையில் நாடகங்களை படைப்பது அவருக்கே உரிய ஒரு தனிச்சிறப்பு. நாடகங்களில் நகைச்சுவையை அள்ளி வீசுவது போல் நிஜவாழ்க்கையிலும் தன்னை சுற்றி இருப்பவர்களை மனம் விட்டு சிரிக்க வைப்பதிலும் வல்லவர். ஒத்திகைகளின் போது சிரிப்புக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.
சிவநாதன் மாமா தான் ஒரு பெரும் புலவர் என்றோ, எழுத்தாளன் என்றோ நாடகப்படைப்பாளி என்றோ பொறியியளாலர் என்றோ என்றுமே பெருமை கொள்பவர் அல்ல. பழகுவதற்கு மிக மிக இனிமையானவர், எளிமையானவர் கூட.
எல்லோருக்கும் புலவராக அறிமுகமாகும் நீங்கள் என்றும் எனக்கு சிவநாதன் மாமா என்பதில் சொல்ல முடியாத பெருமை. தமிழ் நாட்டுக்கு ஒரு பாரதி கிடைத்தது போல் இலங்கை மண்ணுக்கு ஒரு புலவர் சிவநாதன். அவர் வாழும் காலத்தில் நான் வாழ்வது மட்டுமல்லாமல் அவருடன் நன்கு பழகுவதற்கும் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
அன்புடன்
திருமதி அனந்தசயனன்

