எந்த ஒரு சமூகம் தனது தனித்துவத்திற்குரிய கலைகளின் பரீட்சயத்தில் இருந்தும், தனது தன்மானம் கூறும் இலக்கியங்களின் புழக்கத்தில் இருந்தும், தள்ளி நின்றுகொள்கின்றதோ, அந்த சமூகம் தனது சரிவுகளுக்கு மாத்திரமல்ல, தாம் வாழும் சம காலத்தில் கூட வாழும் மாற்றுச் சமூகங்களின் சரிவுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. சரியான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முடியாமல் சங்கடப்படும் போதும், சஞ்சலங்கள் நிறைந்த வாழ்வியல் சுழற்சிக்குள் ஆட்பட்டுவிடும் போதும், ஒரு கூட்டுச் சமூகத்திடமோ அல்லது குறித்த ஒரு சமூகத்தின் பங்காளித் தனி மனிதனிடமோ கலை இலக்கியங்கள் பேசும் சங்கதிகள் போல் காத்திரமானது உலகில் வேறொன்றும் இல்லை.
தம் முன்னவர்கள் குறித்த கதைகளையும், அவர்கள் வாழ்ந்து முடித்த பண்பாட்டின் நீட்சியையும், வரலாற்றில் அவர்கள் பதித்து முடித்த தடங்களையும், எக்காலத்திலும் சொல்லிக்கொண்டிருப்பவை கலைகளும் இலக்கியங்களும் தான். அதனால்தான் வரலாறு தேடி ஆய்வுகளை செய்வோருக்கும், பாரம்பரியங்கள் குறித்த தேடல்கள் நிறைந்தோருக்கும் ஆயிரம் நூற்றாண்டுத் தகவல்களோடு காத்திருக்கும் கலை இலக்கியங்கள் அடிக்கடி தேவைப்படுகின்றன.
இத்தகைய கலை இலக்கிய முயற்சிகளோடு தமக்கான மொழி அடையாளம் குறித்த நேசங்களை முதுகில் சுமந்து திரிவதும், அதை தேவையான போது அடுத்த சந்ததிக்கு கைமாற்றிவிடுவதுமான பணி மிகச் சாதாரணமானதல்ல. அத்தகைய பணிகளை தூக்கிச் சுமப்பதற்கு ஒரு அசாத்தியத் தீரம் தேவையாகவிருக்கின்றது. அத்தகைய அசாத்தியத் துணிச்சலோடு கால் நூற்றாண்டைக் கடந்து வந்திருக்கின்ற லண்டன் தமிழவை என்ற அமைப்புக் குறித்து தமிழுழலகம் பெருமைகொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
தமிழைத் தன் வாழ் நாள் முழுதும் நிபந்தனையற்று இறுகப்பற்றிக்கொண்ட புலவர் சிவநாதன் என்ற தமிழ்ப் புதல்வனின் சிந்தனை முகிழ்ப்பில் உருவாகி, இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளை பூர்த்தி செய்து நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் தமிழவைக்கு இப்படி ஒரு வாழ்த்துச் செய்தி வழங்கும் பேறு என்பது என் வாழ் நாளில் எனக்கு கிடைத்த ஒரு வரம் என்றுதான் நான் கருதுகின்றேன். நல்ல மேய்ப்பன் இல்லாத மந்தை எப்போதும் சரியான மேய்ச்சல் தரையினைக் கண்டடைவதில்லை என்பதை தீவிரமாக நம்புபவன் நான். குறிப்பாக ஈழத் தமிழ் மக்களாகிய எமக்கு எப்போதும், எல்லா விடயங்களுக்கும், எக்காலத்திலும் ஒரு மேய்ப்பன் தேவைப்பட்டபடியே இருக்கின்றான் என்பதை நாம் யாரும் நிராகரிக்கமாட்டோம் என்பது எனது நம்பிக்கை.
வாழ்வு எம்மில் இருந்து அந்நியப்படுத்திய பலவற்றை எமக்கும் எமது அடுத்த சந்ததிக்கும் மீண்டும் பெற்றுக்கொடுக்கவும், எம்மையும் எமதுகளையும் எமக்கே அறிமுகம் செய்து வைக்கவும், அந்நிய ஆதிக்கத்தில் இருந்து எம்மைக் காப்பாற்றித் தரவும், காலத்துக்குக் காலம் எமக்கு நல்ல மேய்ப்பர்கள் தேவையாக இருந்திருக்கிறார்கள்.
சில மேய்ப்பர்கள் பிரம்புகளோடு வரவேண்டியிருக்கிறது. சில மேய்ப்பர்கள் புத்தகங்களோடு வர வேண்டியிருக்கிறது. சிலர் புல்லாங்குழல்களோடும் இன்னும் சிலர் துப்பாக்கிகளோடும் வரவேண்டியிருக்கின்றது.
புலவர் சிவநாதன் லண்டன் புலம்பெயர் மண்ணில் புல்லாங்குழலோடும் புத்தகங்களோடும் ஒரு நல்ல மேய்ப்பனாக கால் நூற்றாண்டுப் பணியினை கிரமமாக நிறைவேற்றியதையிட்டு தமிழ் சமூகத்தினர் நாம் பெருமகிழ்வடைகின்றோம். உள்ளூர் கலை இலக்கியற்களுக்கு உலக முகவரி தருவதற்கு அவரும் அவரது தமிழவை என்ற அமைப்பும் ஆற்றிய பெரும் பணிக்கு காலத்தவர் நாம் பெரும் மதிப்பையும் நன்றியையும் அந்த வேளையிலே மானசீகமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். இன்னும் பல காலம் இந்த மேய்ப்பன் எமக்கு காட்ட வேண்டிய மேய்ச்சல் தரைகள் ஏராளம் உண்டு என்பதை தெரிவித்து நிற்பதோடு இதுவரை ஆற்றிய பணிகளுக்கும் மென்மேலும் தமிழவை ஊடாக அவர் ஆற்ற வேண்டிய பணிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து நிற்கின்றோம்.
தமிழ் அவை தமிழ் மக்களுக்கோர் தனிச்சுவை!
சாம் பிரதீபன்
இயக்குனர்
மெய்வெளி ஊடகம்

