அன்பே தமிழ்! அதிலே அமிழ்! என்ற உயர்ந்த உயிர் மூச்சான தமிழ்ப்பற்றைப் பற்றி வாழும் இலண்டன் தமிழவையின் நிறுவனர், தலைவர் “கவிப்போரொளி” ந.சிவநாதன் அவர்களைக் கடந்த பத்து ஆண்டுகளாக நன்கறிவேன்.
ஐயாவுடன் நெருங்கிய நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருடைய தமிழ்ப் பணியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. இவருடைய ‘ சத்தியம் சாகாது” என்ற கவிதை நூல் என்னை மிகவும் கவர்ந்தது. மகாகவி பாரதி அளவிற்குத் தேச பக்திக் கவிதைகளும், தமிழ்ப்பற்று, இனப்பற்றுக் கவிதைகளும் நிரம்பிய தேன்குடம் அது. ‘ ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்கள்’ என்ற ஆய்வு நூலும் தமிழின் தொன்மை தமிழர் தொன்மையை விரிவாக எடுத்து இயம்புகிறது. ‘ காவியச் சலங்கைகள்’ என்ற நாடக நூல் நாடக உலகுக்கு இவர் வழங்கிய பெருங்கொடையே ஆகும். இம்மூன்று நூல்களையும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆய்வு நிறுவனங்கள். கல்லூரி. பல்கலைக்கழக நூலகங்கள் ஆகியவற்றில் சேர்த்த தொண்டில் அடியேனும் இணைந்த வாய்ப்புமறக்க முடியாததாகும்.
ஐயா சிவநாதன் அவர்கள் ஆழ்ந்த தமிழ்ப் பற்றினர். உணர்ச்சி பொங்க எழுதுவது போலவே பேசுவதிலும் வல்லவர். தமிழகம் வரும்போது எல்லாம் பல ஊர்களில் நாட்டிய நாடகங்களை அரங்கேற்றுவர். தொல்லியல் அகழாய்வு நடைபெறும் இடங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்து தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்துவார். தரம் வாய்ந்த தமிழ் அறிஞர்களை சந்தித்து உரையாடி நட்பை மேம்படுத்துவார்.
எங்கும் எதிலும் தமிழின் மேன்மை. தமிழர் மேம்பாடு பற்றிய கருத்துக்களையே முன்வைப்பார். இவருடைய தேடல்கள் எல்லாம் பொருள் செல்வம் சார்ந்ததாய் அமையவில்லை. தமிழின் அருள் செல்வம் நாடியே அலைகின்ற திரு தொண்டராய் ஐயா விளங்கி வருவது மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும். தன் தந்தையார் உழவர் நல்லதம்பி அவர்களின் படைப்புக்களையும் பதிப்பித்து வெளிக்கொணரும் செம்மல் இவர். ‘ மகன் தந்தைக்காற்றும் உதவி’ என்ற வள்ளுவத்தை கடைபிடித்து வாழும் இவரை வணங்கலாம்.
2015 ஆம் ஆண்டு மதுரையில் இவருடைய ‘ பிரபஞ்ச லீலை” எனும் நாட்டிய நாடகம்…அரங்கேறிய வேளை.. அதனை நேரிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கும் எம்மோடு தமிழ்ப்பணியாற்றும் தமிழார்வலர்கள் தமிழாசான்கள் சிலருக்கும் கிடைத்தது! எமது தாய்மொழியாம் தமிழ்மொழியினதும் தொல்தமிழ்க்குடியினதும் தொன்மைச் சிறப்பினையும் ஆழ்ந்த அன்பியல் அறிவியல் அருளியற் செம்மாப்பினையும் ஓங்கி ஒலிக்க வைக்கின்ற விழிப்புணர்வூட்டும் அந்த நாட்டிய நாடகத்தின் கவி வரிகளையும் காட்சி ஓட்டங்களையும் புலவர் மிக நுட்பமாக அமைத்த பாங்கு மிகவும் அருமை. புலவரது படைப்பாக்கத்திற்கு இசை வடிவம் கொடுத்து நாட்டிய வடிவம் கொடுத்த கலைப்பெருமக்களும்.. இந்நாட்டிய நாடகத்தினில் இணைந்து தமது அற்புத நடன ஆற்றுகைத் திறனால் இப்படைப்பிற்கு அணியூட்டிய இளங்கலைஞர்களும் பெரும் பாராட்டினைப் பெற்றனர்!
அவ்வளவில் புலவர் ஐயாவின் கவிதை நூலான ‘ சத்தியம் சாகாது’ என்ற கவிதை நூலினை பாராட்டி அடியேன் தலைவராக இருந்து வரும் ‘ செந்தமிழ் அறக்கட்டளை” யின் சார்பில் ‘கவிப்பேரொளி’ என்னும் விருதினை அறிஞர்கள் கவிஞர்கள் இணைந்து வழங்கி சிறப்பு செய்த பேற்றினை எண்ணி மகிழ்கின்றேன்.
2024 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மயிலாப்பூரில் ‘ சிவகங்கைச் செந்தீ” நாட்டிய நாடகத்தையும் ஐயா அவர்கள் ஆக்கினார். இந்த நாட்டிய நாடகம் மீண்டும் விடுதலைப் போராட்டத்தினை கண் முன் நிறுத்தியது. வேலுநாச்சியார், குயிலி இவர்களை நேரில் பார்த்தது போல் இருந்தது. ஒவ்வொருவரின் நடிப்பும் அருமையாக உண்மை போல இருந்தது. நாட்டியத்தை அமைத்த பத்மினி குணசீலன் அவர்களின் பங்கு சிறப்பு.
புலவர் தமிழகம் வரும் போதெல்லாம் தகைசால் அறிஞர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் என்ற பட்டியலோடு வந்து சந்தித்து உரையாடி மகிழ்வது இவருடைய தமிழ்ப்பற்று இனப்பற்றுக்கு சான்றாகும். பராசக்தியை உள்ளத்திலும் எழுத்திலும் வைத்து இடைவிடாத தொழும் இன்ப அன்பர் இவர். கொடுமை கண்டு எரிமலை எனக் கனல் உமிழும் கவிஞர் இவர். ஆனால் பனி போல் உள்ளம் கொண்டவர். அறம் தவறாதவர். வாக்கினில் இனிமை கொண்டவர். தூய தொண்டர். 21 ஆம் நூற்றாண்டின் திருத்தொண்டராய் விளங்கி வருகின்றார். இவருக்கு வாய்த்த துணைவியார் இவருடைய நிழல் போலவே பயணிப்பது ஐயா பெற்ற பெரும் பேறாகும். புலவர் சிவனாதன் ஐயா அவர்கள் இன்னும் பல நூல்கள் எழுதவும், பல நாடகங்கள் படைக்கவும் ‘தமிழவை’ அமைப்பை வலுப்படுத்தவும் பராசக்தி அருள் புரிவாளாக!
அன்புடன்
கவிஞர் சுரா

