எங்கள் புலவர் சிவநாதன் மகாகவி பாரதியார் புரட்சி கவிஞர் பாரதிதாசன் வரிசையில் வைத்து எண்ணத்தகுந்தவர். இவரது கவிதைகள் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தவை. இவரின் ஆக்கங்களை படித்து உணர்ந்தோர் இதனை நன்கு அறிவர். இவர் தமிழரை அமைப்பின் ஊடாக பல கவிதை அரங்குகளை நாட்டிய நாடகங்கள் பலவற்றை தயாரித்து அளித்துக் கொண்டிருக்கிறார். இளைய தலைமுறைக்கும் கவிதை எழுத ஊக்குவித்து வருகின்றார். தமிழுக்காகவே வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார்.
இவர் முதன் முதலாக இலண்டனில் மேடையேற்றிய நாட்டிய நாடகம் ‘குடி மறந்த குறள்’ என்பதாகும். இது எங்கள் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் (கி.இலண்டன்) மேடை ஏற்றியது. இதற்கு அமரர் இசைமேதை யாழ்சீலன் இசையமைக்க, திருமதி மாதிரி சிறீக்கந்தராஜா இனிய குரலில் பாட, திருமதி ராகினி ராஜகோபாலின் இயக்கத்தில் நாட்டிய நாடகம் 1987 ஆம் ஆண்டு மேடை ஏறியது. இதைத்தொடர்ந்து எண்ணற்ற நாட்டிய நாடகங்களையும் கவிதைகளையும் இயற்றிய பெரும் புலவர் இவர். இன்னும் பல நூறு கதை களையும் நாட்டிய நாடகங்களையும் எழுதி தமிழன்னையை அலங்கரிப்பாராக. தமிழுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய புலவர் சிவநாதன் இன்னும் பல்லாண்டு நலமுடன் நீடூழி வாழ்க.
திருமதி தவமணி மனோகரன்
தலைமை ஆசிரியர் தமிழ்
திருவள்ளுவர் தமிழ்
பள்ளி ஈஸ்ற்காம்
இலண்டன் கிழக்கு

