சைவஞான வித்தகர் சூ.யோ. பற்றிமாகரன்
மகாகவி நல்லதம்பி சிவநாதன் உடன் பிறவா அன்புத் தம்பி
1985ம் ஆண்டில் முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு பங்கய மணாளன் என்ற முப்பத்தொரு வயது இளங்கவிஞர் “நாவதனை வெட்டியதைச் சமைத்திட்டாலும் – நா தமிழனெ;றே கூறிச் சாகும்” எனத் தமிழ் உணர்ச்சிக் கொண்டு, மண்ணினதும் மக்களதும் நிலை கண்டு நெஞ்சத்தால் குமுறிக் “குமுறல்” என்ற 106 பக்கக் கவிதைத் தொகுப்பினைப் படைத்தளித்தார்..
அந்த ‘குமுறல்’ கவிதைத் தொகுதிக்குப் பங்கய மணாளன் தானே அமைத்துத் தந்த நுழைவாயிலில் “இனக்கொலை, அடக்குமுறை கொடுமை கண்டு கொதித்து வரும் கவிதைகளே எனது பாணி” என்று தன் கவிதை நடைத் தன்மை என்னவெனவும் தானே சொன்னார்.
“பிணக்குவியல் தாய் மண்ணை நனைக்கும் செந்நீர் கண்ணீரே என் கவிதைக்கு எதுகை மோனை” என்று நூலுக்கான கவிதா இலக்கணப் போக்கையும் அவரே கட்டுரைத்தார்.
குமுறல் கவிதைத் தொகுப்பு “திருப்புமுனையிதுதான் திருந்து முனையிதுNவு! உருப்படியாய் ஒன்றாய்த் திரண்டிடுவோமென்றால் உருப்படுவோம், உயர்ந்த சந்ததியைப் படைப்போம்!” என்று ஈழத்தமிழர் தேசமாய் எழுந்து தங்கள் விடுதலைக்காகக் ‘கடைக்குருதிவரையிற் கடுஞ்சமர் புரிந்திட அழைத்தது. அந்தப் பங்கயமணாளன் அன்று முதல் இன்று வரை 39 ஆண்டுகள் அதே நோக்குடன் பாட்டுத்திறத்தாலே ஈழத்தமிழர் நாட்டு விடுதலைக்காய் அயராது உழைத்து வருகின்றார்.
ஆம்!. அந்தப் பங்கயமணாளன்தான் எங்கள் முன் இலண்டனிலிருந்து “கவிதாப்பேரொளி” எனத் தமிழகமும் போற்ற உலகத் தமிழ் மகாகவியாக விளங்கிக் கொண்டிருக்கும் ஈழத்து முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி அவர்களின் இளைய மகன் பொறியியல் அறிவுரைஞர் நல்லதம்பி சிவநாதன் அவர்கள்.
“உலக நலத்தில் தன் நலத்தையும், உலகப் பெருஞ்சாலையில் தன் பயணத்தையும், உலக வாழ்க்கையில் தன் மக்கள் வாழ்க்கை நிறைவினயும் அறிய வல்லவனே பாவலன். பகைவரின் மனவிருள் நீக்கி அறிவொளி தோன்றவும், பாழ்பட்டு நின்று பரிதவிக்கும் மேலான மக்கள் போராட்டம் வெற்றிக்கொடி ஏந்தவும், மேலான மக்கள் வாழ்வு விடுதலை பெறவும், பங்கயமணாளன் பாடல்கள் கைகொடுக்கும் என்பது முக்காலும் உறுதி உறுதி” என்பது குமுறல் நூலுக்கு த.கோவேந்தன் “ஒரு பாவலனின் குமுறல்” என்ற தலைப்பில் அளித்த அணிந்துரையில் கூறினார்.
புலவர் ந. சிவநாதன் அவர்கள் 29.03. 1992 இல்; தனது குமுறல் நூலின் முன் பக்கத்திலே “ அன்புச் சகோதரன் பற்றிமாகரனுக்கு – அன்புடன், பங்கயமணாளன்” என்று தன் கைபட எழுதி என்னையும் தன் தம்பியருள் ஒருவராக்கி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. அன்று முதல் இன்று வரை ‘டே; என்று என்னை அழைத்து அன்புரிமை கொண்டாடுவதில் சிறிதளவும் மாற்றம் இல்லாத தொடர்பறாத நீண்ட பயணத்தைக் கொண்ட நட்பு புலவரின் நட்பு. இதனைப் பகிர்கையில் குமுறல் நூலில் அவரின் ஆரம்பகாலக் கவிதைகள் வெளிவருவதற்கு முன்னமே தான் “பயணம்” என்ற கவிதையைத்தான் தனது முதற்கவிதையாக எழுதியதாகவும் அது ஈழத்தமிழினத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திய கவிதாப்படைப்பு என்றும் கூறியது நினைவுக்கு வருகிறது. இந்த நினைவு புலவரின் உள்ளம் என்றும் தொடரும் நட்புப் பயணத்தைக் கொண்டது ஆதலால் எங்கள் நட்பு காலங்களைக் கடந்து தொடரும் என்ற நம்பிக்கை அன்றே வந்தது அது இன்று உண்மையாகி தமிழவையின் வெள்ளிவிழா ஆண்டின் பெருமகிழ்ச்சிப் பெருவிழாவில் மகிழ்ந்து உறவாட வைக்கிறது. இந்த நட்புடை அனைவரையும் தானாகவே கருதி பாசமொழியாம் ஒருமையில் அழைக்கும் உறவுப்பண்பாடு புலவரின் உரிமைப்பண்பாடாக உள்ளது. இன்றைய உலகின் தூக்கி வீசும் பண்பாட்டின் வார்த்தை ஜாலமான போலியான மரியாதைப்பன்மை வெறும் முகத்துதியாக அமையும் சமகாலத்தில் தொன்மைப் பண்பாட்டின் அன்பின் ஆழத்தை உள்ளங்கள் ஒன்றாகும் உள்ளப் பிணைப்பின் அமுதசுகத்தின் ஆனந்தப் பெருக்கின் உணர்ச்சித் துள்ளலை புலவரின் உறவாடலிலேயே கண்டு அனுபவிக்க முடிகிறது. இதற்கு தமிழவை வெள்ளிவிழாவைத் தங்களின் வீட்டு விழாவாகவே கூடி நிற்கும் இந்த நட்பாளர் வட்டமும் சான்றுபகர்கின்றது.
புலவரை எங்கு முதலில் கண்டேனோ அன்றே அவர்க்கு ஆளாகிய வரலாற்றையும் இங்கு எழுதினால்தான் எதனால் புலவர் சிவநாதன் ஈழத்தமிழரின் இதயத்தில் நட்பாளனாகக் கொலுவீற்றிருக்கம் வல்லமை பெற்றார் என்பது தெளிவாகும். 1991இலே வோல்தம் பொரஸ்ட் வில்லியம் மொரிஸ் சமுக மண்டபத்திலே “ நம்நாடு” என்ற புலவர் சிவநாதனின் கலை இலக்கியப் பண்பாட்டு மாதஇதழைக் கையில் தந்து என்னுடைய யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரிய கலாத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாணவர் தலைவர் அன்புடை சூசைப்பிள்ளை ரூபேர்ட் அவர்கள் புலவர் அவர்களை முதன்முதலில் அறிமுகம் செய்தார். அப்பொழுது அந்த நம்நாடு இதழின் அட்டைப்படத்தில் ‘தட்டேந்தி நின்ற’ஈழத்தமிழ்ச்சிறுமி ஒருத்தியின் இதய அழைப்பாக புலவர் அதில் எழுதியிருந்த கவிதாவரிகள்,
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
என்ற வள்ளுவர் குறளுக்கு உதாரணமாக எங்கள் இதயங்களை ஒத்த உணர்;ச்சிப் பெருக்கில் இறுகப் பிணைத்தன – தோளைத் தோளோடு இறுகக் கைகள் அணைந்தன. அன்றைய நிகழ்வில் அடுத்து 1990 களில் இலண்டன எழுச்சி விழாக்களில் மாவீரர் வணக்கப் பாடலாகப் பாடப்பெற புலவரின் “வீர விளக்கேற்றி வைத்து … விடுதலைக்கு ஊற்றுவைத்துத் .. தூரவழி செல்கின்ற தோழர்களே! – அந்த நேரம் வரும்போது ஒரு நீதி வெல்லும் – எங்கள் நாளையுகம் வரலாற்றின் பெருமை கொள்ளும்!” என்ற பாடல் பாடப்பெற்ற பொழுது ஈழத் தேசிய விடுதலைப் போராட்டக் கவிஞன் ஒருவனின் தோள் தொட்ட மகிழ்வில் உள்ளம் துள்ளியது. அன்று முதல் இன்று வரை விட்டுப் பிரியா உறவாக 33 ஆண்டானாலும் புலவரண்ணா என்றாலே உள்ளம் விடுதலைக் கூத்தாடுவதால்தான் என்னை அறியாமலே அவருடைய சந்திப்புக்களில் நான் விடுதலை வேகம் கொண்டு பேசுகின்ற தன்மை தொடர்கிறது. இதே நிலைதான் தாயகப் பற்றும் தமிழ்மொழிப் பற்றும் மானிட விடுதலை நோக்கும் உள்ள புலவரின் நண்பர்கள் வட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாரதி விடுதலைக்காகக் பொட்டல் காட்டுப் பொந்தில் வைத்த அக்கினிக் குஞ்சு மனிதவடிவாகி வட்டுக்கோட்டையில் உயிர் பெற்றெழுந்து இலண்டனில் அன்பு உறவாடும் உருவாகவே மகாகவி ந. சிவநாதன ஆகி நிற்கின்றது; என்பதறிவர். பார்வையிலே வீரமிடுக்கு பழக்கத்திலே குழந்தைச் சிரிப்பு மட்டுமல்ல “அன்பால் குழந்தை அடிக்கிறது, தடவிப்பார்த்தால் இனிக்கிறது” என்ற கண்ணதாசன் கவி வரிகள் புலவருக்கும் அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் என்பது வாழ்க்கை அனுபவம். அன்பைப் பொழிகையில் சின்னக் குழந்தையின் பாசப்பொழிவு தரும் அற்புதம் – சிறு ஏமாற்றமும் தாங்காது குழறிய அழும் குழந்தை உள்ளமாகவும் சிறிது காலத்தில் அதை மறந்து கட்டியணைத்து முத்தமிடும் மாறாநட்பு உள்ளமாகவும் வாழ்நாள் எல்லாம் மாறாதிருப்பதுடன் மனதுக்கண் மாசில்லா மனித மனம் புலவரின் அன்பு மனம் என்பதை அனைவரும் ஏற்பர். உறவு மறுக்கப்படுகிறது எனக் கண்டால் அவரின் மொழியில் மறச்சீற்றம் கொண்டெழும் அதே புலவரின் உள்ளம்தான் உண்மையை உரைக்கையில் எஃகு அணைய இதய உறுதியுடன் கவிமொழி பேசும். இதுவே அவரின் தேசம் தேசியம் தெய்வம் எமைக்காத்திடும் உள்ளத்தரண்கள் என்று அவரின் தேசப்; பணிகளின் தமிழ்ப் பணிகளின் மக்கட் பணிகளின் வேராக இருந்து வருகிறது. ஐம்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட இந்த தேசம் தேசியம் தெய்வ முன்னுரிமையின் வழியிலேயே தமிழரின் விழ விழ எழும் உள்ள உறுதியின் ஊற்றாகப் புலவரின் படைப்புக்களில் வெளிவந்தது. அவரின் நல்லாக்கக் கனவின் கட்புல வடிவாக” ஆன்Nறூர் அறிவும் சான்றோர் சால்பும் தோன்றாத்துணையாய்க் கொண்டது அவையே” என்ற உறுதியிருந்ததையே அதுவே தமிழவை என்று மக்கள் திரள்வடிவொன்றை மண்ணில் அவர் 1999இல் தோற்றவிக்க இறைசித்தம் கைகூடச் செய்தது.
அதுவும் நான் வாழும் ஒக்ஸ்வேர்ட் நகரின் கிரைஸ்ட் சேர்ச் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள தேம்ஸ் நதித்தீரத்துப் பசும்புற்றரையில் இருந்துதான் தமிழவை அமைப்பு விதிகளை எழுதி புலவர் ந. சிவநாதன் தமிழவையைக் கட்டமைத்தார். அப்பாழுது இதே பசும்புல்தரையில் இதே இடத்தில்தான் உலகின் பாராளுமன்ற முறைமையை கிரைஸ்சேர்ச் பல்கலைக்கழகத்தின் அன்றையப் போரசிரியர் டாக்டர் யோண் லொக் மக்களாட்சிக்கான உயிர்ப்பாக உருவாக்கினார் என்ற எண்ணம் நெஞ்சில் எழுந்த பொழுது தமிழவையும் தமிழரின் மக்கள் ஆட்சி மண் மீதில் உயிர்ப்புப் பெறுவதற்கான இறையாற்றலாகப் புலவரின் மொழியில் கூறினால் ஆதிபராசத்தியின் ஆற்றல் பெருக்காக பிறப்பெடுக்கிறது என்ற எண்ணம் வந்தது. தமிழவை என்ற பெயர் தமிழ்ஞான சம்பந்தராகத் தன்னை முன்னிலைப்படுத்திய திருஞானசம்பந்த சுவாமிகள் வடிவமைத்த சொல். “எனது உரை தனது உரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்” எனத் தம்pழ்ஞானசம்பந்தர் திருஇலம்பையங்கோட்டூரில் அருளிய திருப்பதிகத்தில் தனது மொழி இறைமொழியே என எடுத்துரைத்த பின்னணியில் “பண்ணும் பதம் ஏழும் பல ஓசைத் தமிழவையும் உள்நின்றதொர் சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் ” எனத் தனது திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில் “தமிழவை” என்ற சொல்லாட்சியை வடிவமைத்தார். “தமிழவை என்றாலே இசைத்தமிழும் இயல்தமிழும் நாடகத்தமிழும் ஒக்களித்து நடம்புரியும் தமிழ் மன்றம் என்ற விளக்கத்தினை அத் தேவாரம் தெளிவாக்கியது. பாடி ஆடிக் கூடிக் குதூகலித்து ஒக்களித்து மகிழ்வதுதான் தமிழவை. அத்துடன் கலைஞானசம்பந்தன் தமிழவை ஒக்களிப்புக் கேட்டோர் “ஊழின்மலி வினைபோயிட உயர்வான் அடைவாரே” என இந்தத் திருவீழிமிழலைத் திருக்டைக்காப்பை அமைத்ததினால் தான் தனது முதல் தேவாரத்தின் திருக்கடைக்காப்பில் “ திருநெறிய தமிழ் வல்லார் தொல்வினைகள் தீர்த்தல் எளிதாமே” எனப்பாடி விதி வெல்லும் சத்தியாகத் தமிழை வாழ்வை முன்னிறுத்திய பின்னணியில் தமிழவையாகத் தமிழர் கூடிடும் பொழுது அந்தத் தமிழவை விதி வெல்லும் ஆற்றல் தரும் புனிதப் பேரவையாகத் துணைசெய்யுமென்று தமிழவையைச் சேக்கிழர் பெருமானின் புனிதப்பேரவை கடவுளடியார்கள் என்ற கருத்துடன் ஒப்பீடு செய்ய முடிகிறது. . இவருக்கு முன்னரே திருநாவுக்கரசர் தமிழோடிசை பாடல் மறந்தறியார் “அஞ்சுவ யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை” ஆதலால் “நாமார்க்குங் குடியல்லோம் – நமனையஞ்சோம்” என்று மரணமற்ற மனித குலத்தவராகிய தமிழராகிய நாம் “நாமார்க்குங் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழையோர்காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்” வாழ்வோம் எனத் தெய்வத்தை நாளாந்த வாழ்வில் முன்னிலைப்படுத்தினார் இந்த தமிழர் மரபில் எந்நாளும் தமிழவையின் தலைமை தெய்வமே என்பது புலவர் சிவநாதனின் சிந்தனைத் தெளிவுமாகும். அதனாலேயே தேசம் தேசியம் தெய்வம் போற்றலும் பேண உழைத்தலும் இலண்டன் தமிழவையினர் நோக்கு என்று புலவர் தெளிந்துரைத்தார். நின்ற சொல்லராகத் தமிழவை உறுப்பினர் போக்கு அமைந்திடப் புலவர் என்றும் ஆசிக்கிறார். தமிழவையின் உறுப்புரிமைப் பயனாக அன்பே தமிழ் அதிலே அமிழ் என்ற தெய்வ வாக்கின் வாழ்வாகத் தமிழவை உறுப்பினர் வாழ்வு அமைந்திட வேண்டும் என்பது அவர் எண்ணம். இந்த அன்பே தமிழ் அதிலே அமிழ் என்ற தமிழவையின் வாழ்வியல் அழைப்பும் ஒரு வான்வழி அசரீரி வாக்குத்தான். ஆம்! நான் மகாகவி சேக்ஸ்பியரின் 200 வது ஆண்டை முன்னிட்டு தமிழ்மகாகவிகளின் மாநாடு ஒன்றை இலண்டனில் தமிழவையடனும் காலஞ்சென்ற தமிழ் செயற்பாட்டாளர். சொர்ணமலர் முருகையா அவர்களுடனும் இணைந்து நடாத்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில் திடீரென தெய்வாதீனமாக ஒக்ஸ்வேர்ட்டில் எங்கள் வீட்டில் “அன்பே தமிழ் அதிலே அமிழ்” என்றுதான் இனித் தமிழவை பயணிக்க வேண்டுமென்றார். இவைகளை எல்லாம் எடுத்து நோக்குகையில் இன்று புலவர் அண்ணா ந. சிவநாதனை நிறுவனராகவும் இலண்டன் பெருங் கவிஞர் பாலரவி அவர்களைத் தலைவராகவும் கொண்டிலங்கும் தமிழவை தெய்வத்தின் சித்தம். தமிழவையின் உறுப்புரிமை தெய்வத்தின் அழைப்பு. தமிழவையில் உண்மையும் நேர்மையுமாகச் செயற்படுவதன் பயன் தெய்வதரிசனம். இந்தத் தமிழவை புனிதப்பேரவையாகத் தாயகமும் தமிழகமும் மட்டுமல்ல அனைத்துலகும்; தாயக தேசிய தெய்வம் என்ற உணர்வில் சிறந்திட இறைவனிலும் மனித சமத்துவ சகோதரத்திலும் நிலைத்து நின்று “அன்பே தமிழ் அதிலே அமிழ்” என அன்புப்பணிபுரிந்து உலகில் பாதுகாப்பும் அமைதியும் வளர்ச்சிகளும் சிறக்க உலகு உள்ளவரை அரும்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் திருவருளை இன்தமிழால் வேண்டி இதய அன்புடன் எனதும் எனது மனைவி முனைவர் றீற்றா பற்றிமாகரனதும் தமிழவைக்கான வெள்ளி விழா வாழ்த்தினைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

